Wednesday, January 17, 2007

நிலா பற்றிய ரகசியங்கள்

இரவு முழுக்க
மரங்கள் பற்றிய
நினைப்பாகவே இருக்கிறது

பூச்சிகள்
தம் தடம் வழியே
வேர்களை நகர்த்திச் செல்வது பற்றி

வேர்களுக்குள்
நம் ஆயுள் தேங்கியுள்ள
குறியீடுகள் பற்றி

வேர்களுக்கும்
நிலாவுக்குமுள்ள
உறவு பற்றி

வாப்பாவிடம் கேட்டேன்

வேர்கள்
நிலாவிலிருந்து
முளைத்து நீளும்

அதன் நுண் மயிர்களுக்குள்
நம் ஆயுள்
கிளைத்து முடியப்பட்டிருக்கும்

பூச்சிகள் தான்
இந்த ரகசியத்தின்
பாதுகாவலர்கள்

அவர் சென்னார்

நிலாவின்
இலைகள், கிளைகள்
பற்றி கேட்டேன்

நம் உடலங்கள்
நிலாவின்
இலைகளாகும்

தாயின்
பரிசுத்த கருவறை
அதன் கிளை என்றாகும்

அவர் சென்னார்

சூனிய வெளிகளுக்கு
நம்மை அழைத்துச் செல்லும்
ஆழ்ந்த பரவசம் பற்றி
கேட்டேன்

நிலாவினை
பாம்பு விழுங்கும் போது
நாமும்
காணாமல் போய் விடுகிறோம்

அவர் சென்னார்

சுதேசத்தின்
துயரங்கள் பற்றி
கேட்டேன்

அவை
நிலாவில் கூடு கட்டி வாழும்
பறவைகள் என்றார்


பின் குறிப்பு :
நான் அவர் மகனானது பற்றி கேட்டதற்கு அவரே என் மகனானது குறித்து சொன்ன விடயங்களை நானிங்கு குறிப்பிடவில்லை. ரகசியங்கள் இன்னும் வரும்...

1 comment:

amna said...

Hi i am fawzar(from Dubai),
Now I dont have time to read online thatsway i am copying to read in my room. definitly i know your think is very different pure.
Anyhow i wish to become a millionor....
If you have time come to my room. Thanks for giving information from your heart for such as online persons...