Saturday, February 17, 2007

மொழி என்பது பரம்பரையாகக் கடத்தப்படும் அனுபவங்கள்

வாழ்தலின்
நொடிகள் வழியே
வாப்பாவோடு பகிர்ந்த
நாட்களை நினைந்தழுது
பின்
தேற்றிக் கொள்ளத்தான்
முடிகிறது


புலன்கள் கடந்து
பரிமாணங்கள் கடந்து
பெயர் தெரியாத மரமொன்று
என்னுள்
வேர்கள் விரித்து
சிறகுகள் விரித்து
விரிந்து வளர்கிறது

எனது உயிர், விருப்பங்கள்
கிளிகளாகவும்
எனக்குப் பிடித்தமானவர்களின்
உயிர்கள், விருப்பங்கள்
மணிப்புறாக்களாகவும்
உனது நினைவுகள்
அறியப்படாத பறவையொன்றால்
நீண்ட காலமாக
அந்த மரத்தில்
அடைகாக்கப்பட்டும் வருகின்றன

கிளிகளுக்கு
சிறகு முளைத்துப் பறந்தால்
எனது முட்டைகளை
உன்னினைவுகளோடு
சேர்த்து வைக்கும்படி
மகனுக்குச் சொல்லியிருக்கிறேன்

அவன்-
உன்னினைவுகளையும்
நான் சுமக்கின்ற
ஒரு யுகத்தின் பாரத்தையும்
இறக்கி வைக்கப் போதுமானவன்

வாப்பா..!
என்றுதான் அழைக்கிறேன்

என் மாரில் தூங்கி
எனக்குப் புரியாத மொழிகளில்
தாலாட்டுகிறான்
நீ-தாலாட்டியதைப் போல்


1 comment:

Shangaran said...

ந‌ய‌மான வ‌ரிக‌ள்.

shangaran.
http://shangaran.wordpress.com