Wednesday, January 17, 2007

நிலா பற்றிய ரகசியங்கள்

இரவு முழுக்க
மரங்கள் பற்றிய
நினைப்பாகவே இருக்கிறது

பூச்சிகள்
தம் தடம் வழியே
வேர்களை நகர்த்திச் செல்வது பற்றி

வேர்களுக்குள்
நம் ஆயுள் தேங்கியுள்ள
குறியீடுகள் பற்றி

வேர்களுக்கும்
நிலாவுக்குமுள்ள
உறவு பற்றி

வாப்பாவிடம் கேட்டேன்

வேர்கள்
நிலாவிலிருந்து
முளைத்து நீளும்

அதன் நுண் மயிர்களுக்குள்
நம் ஆயுள்
கிளைத்து முடியப்பட்டிருக்கும்

பூச்சிகள் தான்
இந்த ரகசியத்தின்
பாதுகாவலர்கள்

அவர் சென்னார்

நிலாவின்
இலைகள், கிளைகள்
பற்றி கேட்டேன்

நம் உடலங்கள்
நிலாவின்
இலைகளாகும்

தாயின்
பரிசுத்த கருவறை
அதன் கிளை என்றாகும்

அவர் சென்னார்

சூனிய வெளிகளுக்கு
நம்மை அழைத்துச் செல்லும்
ஆழ்ந்த பரவசம் பற்றி
கேட்டேன்

நிலாவினை
பாம்பு விழுங்கும் போது
நாமும்
காணாமல் போய் விடுகிறோம்

அவர் சென்னார்

சுதேசத்தின்
துயரங்கள் பற்றி
கேட்டேன்

அவை
நிலாவில் கூடு கட்டி வாழும்
பறவைகள் என்றார்


பின் குறிப்பு :
நான் அவர் மகனானது பற்றி கேட்டதற்கு அவரே என் மகனானது குறித்து சொன்ன விடயங்களை நானிங்கு குறிப்பிடவில்லை. ரகசியங்கள் இன்னும் வரும்...

Monday, January 15, 2007

என் மகனுக்குப் பல் முளைத்து வளர்கிறது

குளிர் முற்றத்தில்
உன்
ஞாபக வாசணையை பரப்பியிருக்கிறேன்

என் காதுகள் உணராத
நீ மலர்ந்த
வாசணை

விரல்களுக்குள் நிரப்பி
கவிதை எழுதுகிறேன்

முற்றத்து மண்
வாசணையின் நிறமாகிறது

மின்மினிகள் தாழப்பறந்து
நீ விட்டுப்போன
உயிர் மீது
மின்சார முட்டையிடுகின்றன

நேற்றிரவு கனவில்
என்-
முற்றத்து மணற் பரப்பில்
புற்று நோய்க் கட்டிகள்

சரி, பிழைக்குள்
அடங்காத - என்
ஆசைகளின் சந்நிதானத்துக்கு
நீ-
ஞாபக வாசணையோடு
மின்சார முட்டைகளோடு
புற்று நோய்க்கட்டிகளோடு
அடிக்கடிவந்து போகிறாய்!

உன் ஞாபகங்களை
இரமாணித்து
உறங்க வைப்பதற்குள்
இரவுவிடிந்து போகிறது!

may 2004

நான் சிறுவனாயிருந்த போது ஒரு கனவு

ஒரு-
வெள்ளைப் பேய்
சிறகு முளைத்துப் பறப்பதாயும்
நீண்ட பற்கள்,
உருண்டைக் கண்கள்
பயமுறுத்தவதாயும்
பிரமை எனக்குள்

பாரிச வாத நோயாளியாய்
இழுபட்டு இழுபட்டு
இம்சைப்பட்ட தூக்கங்கள்

இன்னும்-
அந்த இரவின்
எச்ச சொச்சங்கள்
என்-
தகைப்பு அடங்கி விடவில்லை
அவர்கள்நீர் தெளித்த பின்னும்

நான் கேட்டதில்லை
கொஞ்சம் தண்ணீர்
தெளித்த பிறகு
மறுக்கமனம் வரவில்லை

அது-
காட்டுப் பேயாக
நான்
காட்டுக்குள் இருப்பதாயும்
என்னைச் சுற்றிபேய்க் குஞ்சுகள்

கொஞ்சம் சந்தோசமாய்
இருந்தது-
கத்திக் கதறிக்
கண்விழித்து
கனவென்றான பின்

ஓடிப்போய்
ஒளிந்து கொண்டது
தூக்கம்-
வீட்டு மூலைக்குள்
விடியுமட்டும்
வந்து விழாமல்

என்-
அறைக்கதவும்
ஒற்றை ஜன்னலும்
தட்டப் படுகிறது
எனக்கு
பயமாக இருக்கிறது

கூசாவில் தண்ணீரில்லை
என் புத்தகங்களில்
பேய்க் கதைகள்
பிசாசுக் கதைகள்

சரி, பிழைதெரியாத
என்னை
தனியறையில் போட்டது
யார் குற்றம்?
அதுவும்-சகுனம் பார்த்து !

feb 2002